சிங்கம் விமர்சனம்
கமர்ஷியல் படம் என்ற பெயரால் நம்மைத் துன்புறுத்திவரும் பல படங்களுக்கு மத்தியில் நேர்த்தியான ஒரு கமர்ஷியல் படத்தைத் தந்து ஆசுவாசப்படுத்தியிருக்கிறார் ஹரி.
நேர்மையும் துணிச்சலும் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி சர்வ வல்லமை படைத்த தாதாவை எப்படி வெல்கிறார் என்ற ஆகிவந்த கருதான் சிங்கத்தின் மையமும். ஆனால் அதை வித்தியாசமான சம்பவங்களாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் பார்க்கும்படி செய்திருக்கிறார் ஹரி. இந்தத் திரைக்கதையில் சூர்யாவின் துடிப்பு, பிரகாஷ்ராஜின் நடிப்பு, அனுஷ்காவின் வசீகரம் எல்லாம் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
சென்னையில் பல விதமான கட்டப் பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பிடுங்குவது ஆகிய வேலைகளில் ஈடுபட்டுவரும் மயில்வாகனன் (பிரகாஷ்ராஜ்) தன் கூட்டத்தில் ஒருவனைக் களை எடுக்கும் காட்சியோடு ஆரம்பமாகிறது சிங்கம். அடுத்து தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிங்கம் துரைசிங்கம் (சூர்யா) கோவில் கொள்ளையை ஒண்டி ஆளாக முறியடிக்கும் காட்சி. தன் சொந்த ஊரிலேயே வேலை செய்ய விரும்பி வந்திருக்கும் இளைஞன் துரைசிங்கம் ஊரின் செல்லப் பிள்ளை. பல வழக்குகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகவே தீர்த்துவைக்கும் வித்தியாசமான அதிகாரி.
இந்தியா சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முதலாளி நாசர் தன் குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வருகிறார். கூடவே அவர் மகள் காவ்யாவும் (அனுஷ்கா) வருகிறார். சிங்கத்துக்கும் காவ்யாவுக்கும் நடுவே என்ன நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மிரட்டல் கேஸ் ஒன்றில் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொள்ளும் மயில்வாகனன் தூத்துக்குடிக்கு வர நேர்கிறது. சிங்கத்துக்கும் மயிலுக்கும் முட்டிக்கொள்கிறது. சிங்கத்தைச் சென்னைக்கு மாற்றல் செய்து அவனைத் துளைத்தெடுக்கும் மயில்வாகனனுக்கு எதிராகச் சிங்கம் சிலிர்த்தெழுகிறான். நடுவில் காதலுக்கும் சோதனை. இரண்டிலும் சிங்கம் எப்படி வெல்கிறான் என்பதே கதை.
முதலிலேயே சொன்னதுபோலக் கதை புதிதல்ல என்றாலும் அதைச் சொன்ன விதம் கவனிக்க வைக்கிறது. சாமிக்குப் பிறகு ஹரியின் திரைக்கதை மேஜிக் இதில் வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடுவே மோதல் படிப்படியாக வளர்ந்து முற்றிக்கொண்டே போவது விறுவிறுப்பான காட்சிகளால் சொல்லப்படுகிறது. 
அரிவாள்களுக்கும் தோட்டாக்களுக்கும் மத்தியில் மென்மையான காதலை ரசனையாகச் சொல்வது ஹரியின் வழக்கம். இதிலும் அது சோடைபோகவில்லை. ஆனால் சூர்யாவுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் அனுஷ்கா பேசும் இடம் எடுபடவில்லை. திரைக்கதையை நன்றாகச் செதுக்கியிருக்கும் ஹரி, ஸ்டண்ட் காட்சிகளில் அதிக சுதந்திரம் எடுத்துக்கொள்கிறார். வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன.
சூர்யாவின் பன்முகத் திறமைகளுக்குத் தீனிபோடும் வேடம் இல்லை என்றாலும் டிப்பிக்கல் கமர்ஷியல் ஹீரோ வேடத்தில் பட்டையைக் கிளப்புகிறார் சூர்யா. போலீஸ் உடையில் மிடுக்குடன் தோன்றும் சூர்யாவின் முக பாவங்களும் உடல் மொழியும் கச்சிதம். சீறி அடிப்பது, ஆக்ரோஷமாகப் பேசுவது, குழைந்து காதலில் உருகுவது, நெருக்கடி கொடுக்கும் டிப்பார்ட்மெண்டுக்குள் அசராமல் தன் தரப்பை முன்வைத்துப் பேசுவது என்று எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார். பிரகாஷ் ராஜின் கோட்டைக்குள் நுழைந்து சவால் விடும் காட்சியும் நிழல்கள் ரவியிடம் பேசும் காட்சியும் தனித்து நிற்கின்றன.
அழகுப் பெண் அனுஷ்காவுக்கு வழக்கமான ரோல்தான். ஆனால் தன் க்யூட்டான முக பாவங்களால் படத்துக்கு வசீகரம் சேர்க்கிறார். பாடல் காட்சிகளில் தாராளமயக் கொள்கையை அமல்படுத்துகிறார்.
தாதா வேடம் பிரகாஷ்ராஜுக்குப் புதிதல்ல என்றாலும் அழுத்தமாகச் செய்திருக்கிறார். ஏட்டு எரிமலையாக வரும் விவேக்கின் காமெடி சில இடங்களில் பரவாயில்லை. ஆனால், கொஞ்ச நாட்களாக மூட்டை கட்டி வைத்திருந்த இரட்டை அர்த்த வசன பாணியை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். காது கூசுகிறது!
தேவிஸ்ரீ பிரசாதின் இசையில் என் இதயம் இதுவரை துடிக்கவில்லை பாடல் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும்போது தாளம்போட வைப்பதோடு சரி.




Buy:Nexium.Mega Hoodia.Petcam (Metacam) Oral Suspension.Zovirax.Accutane.Zyban.Human Growth Hormone.Synthroid.Prednisolone.Actos.Retin-A.Arimidex.100% Pure Okinawan Coral Calcium.Lumigan.Prevacid.Valtrex….