இருமுறை தோல்வி மாறியது : அக்னி-2 ஏவுகணை அபாரம்
பாலாசூர் : அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 2,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உடைய அக்னி-2 ஏவுகணைச் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
அக்னி-2 ஏவுகணைச் சோதனை ஏற்கனவே இரண்டு முறை தோல்வி அடைந்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்த ஏவுகணைச் சோதனை ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் நேற்று நடந்தது. இம்முறை சோதனை வெற்றி அடைந்தது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அக்னி -2 ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த சோதனை, விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது’ என்றனர்.
20 மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் உடைய இந்த ஏவுகணை, 17 டன் எடை கொண்டது. 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, 2,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது.தற்போதுள்ள 2,000 கி.மீ., தூரத்தை, விரைவில் 3,000 கி.மீ., ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு மேம்பாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடந்ததற்காக, விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு, ராணுவ அமைச்சர் அந்தோணி வாழ்த்து தெரிவித்தார்.


